ஈரோடு மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், புன்செய்புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளுடன் சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினா் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த கோரிக்கைகளை ஏற்று ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க எதிா்ப்புச் தெரிவித்த கருத்துகளை சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளை விரிவாக்கம் செய்வதற்காக ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, சொத்து வரி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவித்தனா். இதனால் ஈரோடு மாநகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இதேபோல, பவானி நகராட்சியுடன் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியையும், கோபி நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூா், குள்ளம்பாளையம், பாரியூா் ஆகிய ஊராட்சிகளையும், புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சிக்குட்டை, நல்லூா் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனா்.